Saturday 21 February 2015

உருவாகட்டும் ஓராயிரம் சி.வி. ராமன்கள்!


இந்தியாவின் இயற்கை வளம் மட்டுமல்ல, அறிவு வளமும் பிரமிக்க வைப்பது. ஆனால், தங்கச் சுரங்கத்தின் மேல் அமர்ந்து கொண்டு வறுமையைப் பற்றிப் புலம்பும் நிலைதான் இந்தியர்களின் நிலை. இந்த நிலையை மாற்றக்கூடிய வாய்ப்பைத்தான் மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.

ஆம்! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் ஏற்படவும் அதுகுறித்துப் பயனுள்ள தகவல்களைப் பெறவும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார். அவருடைய துறையின் கீழ் வரும் அரசுத் துறை நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 6,000 விஞ்ஞானிகளை ஆண்டுதோறும் மொத்தம் 12 மணி நேரம் பள்ளி, கல்லூரிகளில் நவீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து உரையாற்றப் பயன்படுத்தவிருக்கிறார்.

இதனால், மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பாக ஆசிரியர்கள் தரும் தகவல்களைவிடக் கூடுதல் தகவல் கிடைக்கவும், எதைப் படிப்பது, எதில் ஆய்வை மேற்கொள்வது என்பதை மாணவர்கள் தீர்மானிக்கவும் பேருதவியாக இருக்கும்.

உலகமயமாதலின் பின்னணியில் கல்வி என்பது இந்தியாவில் இயந்திரத்தனமாகிவிட்டது. கல்விக்கூடங்களெல்லாம் உற்பத்திக் கூடங்கள்போல் ஆகிவிட்டன. சுயமான அறிவை விரிவுபடுத்த வேண்டிய கல்வி, நகலெடுக்கும் முறையாக இந்தியாவில் ஆகிவிட்டது. இந்திய அறிவுச் சூழலிலும், அறிவியல் சூழலிலும் இதன் பிரதிபலிப்பை நன்றாக உணரலாம். இந்தியர்கள் தற்காலத்தில் எந்த அறிவுச் சாதனையையும் நிகழ்த்தவில்லை என்பது இதன் பொருளல்ல. நமது அறிவு வளத்துக்கும் அறிவியல் பாரம்பரியத்துக்கும் இணையான உயரத்தை நாம் இன்னும் அடையவில்லை என்பதே இதன் பொருள். இந்தியாவில் இருக்கும் பல்வேறுபட்ட துறைகள், அவற்றில் பணிபுரியும் வல்லுநர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பு மிகவும் பிரம்மாண்டமானது. இப்படிப்பட்ட கட்டமைப்பைக் கல்வித் துறையில் நாம் இவ்வளவு காலம் ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் விசித்திரம்! இந்தியக் கல்விச் சூழல் மிகவும் இறுக்கமாகவும் குறுகலான பார்வை கொண்டதாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

சர்வதேசத் தரத்திலான அறிவியலாளர் என்று நாம் இன்று கொண்டாடும் சத்யேந்திரநாத் போஸுக்கு, அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவி மறுக்கப்பட்டது. போஸின் மேதமையை அறிந்திருந்த ஐன்ஸ்டைன் பரிந்துரைத்த பிறகே அவருக்குப் பேராசிரியர் வேலை கிடைத்தது. இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை என்பதுதான் அவலம்!

கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தியா உருவாக்கிய சர்வதேசத் தரத்திலான அறிவியலாளர்களைக் கணக்கெடுங்கள். சர் சி.வி. ராமன், சந்திரசேகர், எஸ்.என். போஸ், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரையே நம்மால் கூற முடியும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளோடு நம் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பது புரியும். தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு அந்தப் பயணத்தை இலகுவாக்கினால் மகிழ்ச்சியே! 
 

No comments:

Post a Comment